Wednesday, August 13, 2008

அன்புள்ள சிவாஜிராவ் @ ரஜினி..

குமுதம் அகப்பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட செய்தி. ரஜினியையும் அவரது அரசியல் பிரவேசத்தையும் பற்றியும், குசேலன் படத்தை ஒட்டி கர்நாடகத்தில் ஏற்பட்ட அமளியில் ரஜினி அடித்த பல்டியை பற்றியும் ஞானி எழுதியுள்ளார்!

நன்றி, குமுதம்

-------------------------------------------------------------------------------------------------

அன்புள்ள சிவாஜிராவ் கெய்க்வாட் என்கிற ரஜினிகாந்த் அவர்களுக்கு, வணக்கம்.

உங்கள் படங்களையும் உங்கள் செயல்களையும் இதற்கு முன்பு பலமுறை நான் கடுமையாக விமர்சித்திருக்கிறேன். இந்த முறை உங்கள் நிலை, எனக்குப் பரிதாபமாக இருக்கிறது. இதற்கு வேறு யாரும் காரணம் இல்லை. நீங்களேதான். அரசியல் என்பது இருபக்கமும் கூர் தீட்டப்பட்ட கத்தி. எந்தப் பக்கமும் வெட்டும். அரசியலை நீங்கள் உங்கள் சினிமாவுக்குப் பயன்படுத்தப் பார்த்தீர்கள். உங்களை அரசியல்வாதிகள் பயன்படுத்தப் பார்த்தார்கள். கொஞ்ச காலம் இரண்டும் சாத்தியப்பட்டது. இப்போது நீங்கள் கையில் எடுத்த கத்தியே உங்கள் கையைப் பதம் பார்த்துவிட்டது. அரசியலில் நீங்கள் குரல் கொடுத்தபோதெல்லாம், அதையொட்டி உங்கள் படம் ஒன்று ரிலீசுக்குத் தயாராகிக் கொண்டிருப்பது வழக்கம். படத்திலும் அரசியல் சூழல் சார்ந்து ஓரிரு டயலாக் பேசுவீர்கள். படம் கமர்ஷியல் வெற்றியாகிவிடும். உடனே நீங்கள் இமயமலைக்குப் போய்விடுவீர்கள். மறுபடி அடுத்த பட வேலை ஆரம்பமான பிறகுதான் அரசியல் டயலாகுகள் தொடங்கும். இடையிடையே உங்களை நம்பி தங்கள் அரசியலை நடத்த, அரசியல்வாதிகள் சிலர் கொடுத்த நிர்ப்பந்தங் களில் இன்னும் குழப்பமடைந்து மக்களையும் குழப்பி வந்தீர்கள். இதுதான் உங்கள் அரசியல் வரலாறு. முதன்முதலில் நீங்கள் ஒரு பொதுப் பிரச்சினையில் தெளிவாகப் பேசியது என்பது ஒகேனக்கல் குடிநீர்த் திட்டப் பிரச்சினையில்தான். ஒகேனக்கல் தமிழ்நாட்டுக்குச் சொந்தமான பகுதி. அதில் வரும் காவிரி நீர் தமிழகத்துக்கு உரிய பங்கு. அதிலிருந்து குடிநீர்த் திட்டம் நிறைவேற்றுவது முழுக்க முழுக்க தமிழகத்தின் உரிமை. இந்த சரியான கருத்தைத்தான் நீங்கள் பேசினீர்கள். அப்போதுதான், `இதை எதிர்ப்பவர்களை உதைக்க வேண்டும்' என்று சொன்னீர்கள். பஸ் எரிப்பது, கலவரம் செய்வது, வன்முறை பற்றியெல்லாம் பேசிவிட்டு, அதைச் செய்பவர்களை உதைக்க வேண்டும் என்று நீங்கள் அப்போது பேசவில்லை. எங்களுக்குச் சொந்தமான பகுதியில் நாங்கள் திட்டம் போடுகிறோம். அதை ஆட்சேபித்தால் எப்படி ? ஆட்சேபிக்கிறவர்களை உதைக்க வேண்டாமா என்றுதான் பேசினீர்கள்.

ஆனால் இப்போது மாற்றிப் பேசி, அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை, இந்த அர்த்தத்தில்தான் சொன்னேன், எல்லா கன்னடர்களையும் உதைக்கச் சொல்ல வில்லை, வன்முறையாளர்களைத்தான் சொன்னேன், யாரையும் புண்படுத்தச் சொல்லவில்லை, என்று மன்னிப்புக் கேட்டிருக்கிறீர்கள் - இல்லையில்லை, வருத்தம் தெரிவித்திருக்கிறீர்கள். உங்கள் பேச்சுக்கு, அப்போது நீங்கள் பேசிய மறுநாளே, கர்நாடகத்திலிருந்து கன்னட வெறிச் சக்திகளிடமிருந்து கண்டனம் வந்துவிட்டது. ஆனால் அப்போது நீங்கள் ஏன் இந்த விளக்கத்தை அளிக்கவில்லை ? இத்தனை மாதம் கழித்து இப்போதுதான் விளக்கமும் வருத்தமும் வருகிறது. ஏன் ? `குசேலன்' பட வெளியீட்டை கர்நாடகத்தில் தடை செய்ய கன்னட வெறியர்கள் முனைந்ததுதான் உங்கள் பல்டிக்குக் காரணம். இதுதான் தொடர்ந்து உங்கள் அரசியல் பார்வை. உங்கள் சினிமாவுக்கு உதவி செய்ய அரசியல் பேசி வந்தீர்கள். அதுவே உங்கள் சினிமாவுக்கு ஆபத்தாகும்போது அரசியலையே மாற்றிக் கொள்கிறீர்கள். பத்துப் பேரைத் தனியாளாக அடித்துப் போடுவது, ஒரு முறைப்பிலேயே எதிரியை நடுங்கச் செய்வது, ஒரு பார்வையிலேயே நாயகியை நெளியவைப்பது, `கேட்டாலே அதிருது இல்லே?' முழக்கங்கள் எல்லாம் திரையில்தான் உங்களுக்கு சாத்தியம். திரையில் பாயும் புலி; வெளியில் நடுங்கும் எலி. படத்தை ரிலீசாக விடமாட்டோம் என்று யாராவது சொன்னால், `கேட்டதுமே உதறுது இல்ல ?' இதுதான் யதார்த்தம். திரையில் காட்டும் அதே ஹீரோதான் நிஜ வாழ்க்கையிலும் இருப்பதாக நம்பும் ஒரு ரசிகர்-தொண்டர் கூட்டத்தை நம்பித்தான் பல நடிகர்கள் அரசியல் பிரவேசம் செய்கிறார்கள். உங்கள் அரசியல் டயலாகுகள் அப்படிப்பட்ட ரசிகர்-தொண்டர் கூட்டங்களால்தான் ரசித்து வரவேற்கப்பட்டன. ஒகேனக்கல் பிரச்னைப் பேச்சும், குசேலன் பட வர்த்தகத்துக்காக தெரிவித்த வருத்தமும் உங்கள் சூப்பர் ஸ்டார் பிம்பங்களை உடைத்து நொறுக்கிவிட்டன. கர்நாடகத்தை சமாளிக்கப் பார்த்தால், தமிழகத்தில் எரிச்சல் ஏற்படுகிறது. வாங்கிய பவுன் காசுகளுக்காக உடல் பொருள் ஆவியை தமிழுக்குத் தருவேன் என்றால், கர்நாடகத்தில் படத்தைக் காட்டாதே என்கிறார்கள். இதெல்லாம் நீங்களே ஏற்படுத்திக் கொண்ட சிக்கல்தான். அர்ஜுன், பிரகாஷ்ராஜ் இருவரும் உங்களைப் போல கர்நாடகத்திலிருந்து இங்கே பிழைக்க வந்தவர்கள்தான். இருவருக்கும் இங்கே கணிசமான ரசிகர்கள் இருக்கிறார்கள். தங்களுக்குத் தெரியாத அரசியல் துறையில் மூக்கை நுழைத்து லாபம் அடையவோ நஷ்டம் அடையவோ அவர்கள் விரும்பாததால், இப்படிப்பட்ட சிக்கல்கள் அவர்களுக்கு ஏற்பட வில்லை. உங்களைச் சுற்றி வந்த சினிமா வியாபாரிகளும் அரசியல்வாதி களும் நீங்கள் அரசியலுக்கு வருவதைப் போல ஒரு பொய்யை பிரும்மாண்டமாக்கி ரசிகர்களை ஏமாற்றி தங்கள் லாபத்துக்குப் பயன்படுத்திக் கொண் டார்கள். நீங்கள் அதற்கு உடந்தையாக இருந்தீர்கள். அதன் விைளவுதான் இன்று உங்களுக்கு ஏற்பட்டிருக்கிற பரிதாபகரமான நிலை. கடவுளே எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன். என்னை என் நண்பர்களிடமிருந்து காப்பாற்று என்று ஒரு வசனம் சொல்வீர்கள். எவ்வளவு அர்த்தமுள்ளது ! குசேலன் படம், இந்த வலையிலிருந்து உங்களை நீங்களே விடுவித்துக்கொள்ள கிடைத்த சரியான வாய்ப்பு. ஆனால் அதையும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள படத்தின் இயக்குநர் உங்களை விடவில்லை. படத்தில் உங்கள் மீது என்னைப் போன்றோர் வைக்கும் விமர்சனங்களில் ஒரு சிலவற்றை ஆர்.சுந்தரராஜன் பாத்திரம் வைக்கிறது. நியாயமான கேள்விகளை எழுப்பும் அந்தப் பாத்திரத்தை வெத்துவேட்டுப் பேர்வழியாக சித்திரித்து கேள்விகளின் நியாயத்தை நீர்க்கச்செய்யும் உத்தியும் இருக்கிறது. (அரசியலுக்கு) ``எப்ப வருவேன் எப்பிடி வருவேன்னு யாருக்கும் தெரியாது; ஆனா, வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்''னு பேசிக்கிட்டு நீங்களும் குழம்பி மக்களையும் குழப்பிகிட்டிருக்கீங்களே என்று சுந்தர்ராஜன் பாத்திரம் கேட்கிறது. இதற்கான உங்கள் பதில்: ``அது யாரோ ஒரு ரைட்டர் ஒரு படத்துல எழுதிய வசனம். அதை நான் பேசியிருக்கேன். அதை உண்மைன்னு நீங்க எடுத்துக்கிட்டா நான் என்ன செய்யறது'' என்று சொல்லுகிறீர்கள். எவ்வளவு நேர்மையான, சரியான பதில் ! இதைப் பல வருடங்கள் முன்பே நீங்கள் சொல்லியிருந்தால் இப்போது வந்திருக்கும் எந்தப் பிரச்னையும் உங்களுக்கு வந்திராதே. அடுத்த பதில் அபத்தமானது. ``நான் வந்தா என்ன வராட்டி என்ன ? நீங்க உங்க வேலையைப் பாத்துகிட்டுப் போக வேண்டியதுதானே'' என்கிறீர்கள். மக்கள் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்க்கொண்டுதான் இருந்தார்கள். நீங்கள்தான் வந்து அரசியல் டயலாக் பேசி உங்கள் பக்கம் கவனத்தைத் திருப்பினீர்கள். சுந்தர்ராஜனின் இன்னொரு கேள்விக்கு படத்தில் பதிலே இல்லை. வயசுப் பொண்ணுங்க கிட்ட வந்து `பழகிக்குங்க' என்று பேசும் கேவலத்தைப் பற்றிக் கேட்கிறார். பதிலே இல்லை. அதில் ஆச்சரியம் இல்லை. மலையாளத்தில் துளியும் ஆபாசம் இல்லாமல் எடுத்து வெற்றி பெற்ற `கத பறையும்போள்` படத்தை தமிழில் தயாரிக்கும்போது உங்கள் இயக்குநருக்கு உங்கள் சூப்பர் இமேஜ் மீது கூட நம்பிக்கை இல்லை. வடிவேலுவின் `காமெடி` டிராக்கில் சோனாவையும் நயன்தாராவையும் பயன்படுத்தி ஆபாசத்தைப் புகுத்தியிருக்கிறார். உங்கள் படங்களை ஓடவைக்க எப்போதுமே இப்படிப்பட்ட விஷயங்கள் கூடவே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. குஷ்புவிடம் நீங்களே சொல்லும் `கடவுளே' முதல் `சந்திரமுகி'யில் வடிவேலு காமெடி வரை.... மலையாளப் படத்தில் மம்முட்டி ஏற்ற ஸ்டார் நடிகர் பாத்திரம் , `நடிகனை ரசியுங்கள்; பின்பற்றுவதற்கான தலைவனாக நினைக்காதீர்கள்; அவன் ஏற்ற பாத்திரங்களைத்தான் ரசித்தீர்கள்; அவனையே அல்ல என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்' என்பதை உணர்த்துகிறது. படத்தின் மெசேஜ் நட்பு மட்டுமல்ல. இதுவும்தான். சாமர்த்தியமாக வாசு இதையெல்லாம் வெட்டிக் குறைத்து விட்டார். போகட்டும் நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்றார் அறிஞர் அண்ணா. கர்நாடக வருத்தமும் குசேலனும் ஒரே நேரத்தில் நிகழ்ந்திருக்கின்றன. இரண்டிலிருந்தும் உங்கள் அடுத்த அடி என்ன என்பதை தீர்மானிக்க இயலும்.

அரசியல் உங்களுக்குரியது அல்ல.அரசியலில் செயல்பட, தெளிவான கருத்து, கொள்கை, உறுதி, தன் கருத்தை பிறரை ஏற்கச் செய்வதற்கான திறமை எல்லாம் வேண்டும். நாட் டைப் பற்றி, சமூகத்தைப் பற்றி அக்கறையிருக்கும் மனிதன் நான் என்று நீங்கள் சொல்லலாம். அப்படிப்பட்ட எல்லாருமே அரசியலில் நுழைந்தாக வேண்டும் என்று அவசியம் இல்லை. அவரவர் துறையில் நேர்மையாக சிறப்பாக உழைத்தால் போதுமானது. உங்கள் துறை சினிமா. குசேலன் படத்தில் இருக்கும் காமெடி அபத்தம், ஆபாசம் ஆகியவற்றை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், ஒரு நல்ல படத்தை நீங்கள் அளித்திருக்கிறீர்கள். கதையை உங்களை முன்னிறுத்தி எடுத்துச் செல்லாமல், பசுபதியின் அபார திறமையைச் சார்ந்து அந்தப் பாத்திரத்தை முன்னிறுத்தியே எடுத்துச் சென்றிருக்கும் வாசுவின் பிடிவாதம், கதை மீது அவருக்கும் உங்களுக்கும் இன்னும் மீதி இருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது. சூப்பர் ஸ்டார்களின் படத்தில் கதை என்று ஒன்று தேவையில்லை என்று நினைக்கும் விஜய், அஜித் வகையறாக்களுக்கு நீங்கள்தான் முன்னோடி. குசேலனில் அதை மாற்றியிருக்கிறீர்கள். தொடர்ந்து கதையம்சத்துக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் மட்டும் நடியுங்கள். நயன்தாரா வின் குழந்தையுடன் ஜோடியாக நடிக்கும் காலத்துக்காகக் காத்திராதீர்கள். அமிதாப்பச்சன் என்ற ரோல் மாடல் உங்களுக்கு இருக்கிறார். பொது இடங்களில் வழுக்கைத் தலையுடன் வலம் வரத் தயங்காத நீங்கள், வெள்ளித் திரையில் மட்டும் தயங்குவதில் அர்த்தம் இல்லை. சூப்பர் ஸ்டார் இமேஜ் ஒகேனக்கல் வெள்ளத்தில் அடித்துப் போய்விட்டது. கலைஞன் ரஜினிகாந்தாக அடுத்த பத்தாண்டுகள் செயல்படுங்கள். அதுதான் இன்னும் 60 வருடங்களுக்குப் பிறகு கூட உங்களுக்கு வரலாற்றில் இடம் பிடித்துத் தரும். சினிமாவிலும் அரசியலிலும் மற்றவர்கள் உங்களுக்கு ஏற்படுத்திய பிம்பத்துக்காக உழைத்தது போதும். உங்கள் குடும்பத்துக்கு இன்னும் ஆறு தலைமுறைகளுக்கு சம்பாதித்துக் கொடுத்துவிட்டீர்கள். இனியேனும், உங்களுக்காக, நீங்கள் தேடும் நிம்மதிக்காக வேலை செய்யுங்கள்.

அரசியலிலிருந்து துறவறம், அபூர்வ ராகம் காலத்து சிவாஜிராவின் கலைத் தாகத்தின் மறு உயிர்ப்பு இவை இரண்டும் இருந்தால், இனி நீங்கள் நிம்மதிக்காக இமயமலைக்குப் போக வேண்டியிராது.. அன்புடன்
ஞாநி (குழந்தை யாருக்குச் சொந்தம்... வாசகர் கருத்துக்கள் அடுத்த வாரம்.)

இந்த வாரப் பூச்செண்டு
ரஜினிக்கு அழுத்தமான கதையுடன் ஒரு படத்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு அளித்ததற்காக.

இந்த வாரக் குட்டு
ரஜினிக்கே ஒகேனக்கல் பிரச்சினையில் அடித்த பல்டிக்காக.